iPhoneக்கான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள்
கவனத்திற்கு: இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் தீ விபத்து, மின் அதிர்ச்சி, காயம், iPhone அல்லது பிற பொருட்களுக்குச் சேதம் போன்றவை ஏற்படலாம். iPhoneஐப் பயன்படுத்துவதற்கு முன்பு கீழே உள்ள அனைத்துப் பாதுகாப்புத் தகவல்களையும் படிக்கவும்.
கையாளுதல். iPhoneஐக் கவனத்துடன் கையாளவும். இது உலோகம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனது, மேலும் உள்ளே முக்கியமான எலக்ட்ரானிக் பாகங்கள் உள்ளன. iPhone அல்லது அதன் பேட்டரி கீழே விழுந்தாலோ, எரிந்துவிட்டாலோ, துளையிடப்பட்டாலோ, நொறுக்கப்பட்டாலோ, அதில் திரவம் பட்டாலோ அது சேதமடையும். iPhone அல்லது பேட்டரியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால், iPhoneஐப் பயன்படுத்துவதை நிறுத்தவும், ஏனெனில் அது அதிக வெப்பத்தையோ காயத்தையோ ஏற்படுத்தக்கூடும். விரிசல் ஏற்பட்ட கண்ணாடியுடன் iPhoneஐப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது காயத்தை ஏற்படுத்தக்கூடும். iPhoneஇன் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்படுவது குறித்து கவலை கொள்கிறீர்கள் எனில், கேஸ் அல்லது கவரைப் பயன்படுத்தவும்.
பழுதுபார்த்தல். iPhoneஐப் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் மட்டுமே பழுபார்க்க வேண்டும் iPhoneஐப் பிரிப்பது அதைச் சேதப்படுத்தலாம், இதன் விளைவாக “நீர்த்துளிகள் மற்றும் நீர்ப்புகாத் தன்மையை” இழக்க நேரிடலாம் (ஆதரிக்கப்படும் மாடல்களில்) அல்லது உங்களுக்குக் காயம் ஏற்படலாம். iPhone சேதமடைந்தாலோ செயலிழந்தாலோ, பழுதுபார்ப்பதற்காக நீங்கள் Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ள வேண்டும். பயிற்சி பெறாத தனிநபர்கள் செய்யும் பழுதுபார்ப்புகள் அல்லது போலியான Apple உதிரிபாகங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் பாதுகாப்பையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். பழுதுபார்த்தல் மற்றும் சேவை குறித்த கூடுதல் தகவல்களை, iPhone பழுதுபார்த்தல் தொடர்பான இணையதளத்தில் பார்க்கலாம்.
பேட்டரி. அதிக வெப்பம், தீ அல்லது காயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேட்டரி சேதமடைவதைத் தவிர்க்க, iPhone பேட்டரி ஒரு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநரால் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டும். உள்ளூர் சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும் அல்லது வீட்டுக் கழிவுகளுடன் சேர்க்கப்படாமல் தனியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி பற்றிய தகவல்களுக்கு, பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.
லேசர்கள். iPhone 7 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் உள்ள ப்ராக்ஸிமிட்டி சென்சார், TrueDepth கேமரா சிஸ்டம் மற்றும் LiDAR ஸ்கேனரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட லேசர்கள் உள்ளன. சாதனம் சேதமடைந்தாலோ சரியாக செயல்படவில்லை என்றாலோ பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த லேசர் சிஸ்டங்கள் முடக்கப்படலாம். லேசர் சிஸ்டம் முடக்கப்பட்டுள்ளதாக உங்கள் iPhoneஇல் அறிவிப்பு காட்டப்பட்டால், பழுதுபார்ப்பதற்காக Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ள வேண்டும். லேசர் சிஸ்டங்களில் முறையற்ற வகையில் பழுதுபார்த்தல், மாற்றியமைத்தல், அதில் போலியான Apple பாகங்களைப் பயன்படுத்துதல் போன்றவை பாதுகாப்புச் செயல்பாடுகள் சரியாகச் செயல்படுவதைத் தடுக்கலாம், மேலும் அவை கண் அல்லது தோலில் ஆபத்தான பாதிப்பையும் காயத்தையும் ஏற்படுத்தலாம்.
கவனச்சிதறல். சில சூழ்நிலைகளில் iPhoneஐப் பயன்படுத்துவது உங்களுக்குக் கவனச்சிதறலை ஏற்படுத்தி ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, சைக்கிள் ஓட்டும்போது ஹெட்ஃபோன்களில் இசையைக் கேட்பதைத் தவிர்க்கவும், கார் ஓட்டும்போது மெசேஜ் டைப் செய்வதைத் தவிர்க்கவும். மொபைல் சாதனங்கள் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் விதிகளைக் கவனிக்கவும். வாகனம் ஓட்டும்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, iPhone உடன் வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறாமல் இருக்கலாம்-ஐப் பார்க்கவும்.
வழிசெலுத்தல். “மேப்ஸ்” செயலி, தரவுச் சேவைகளைப் பொறுத்தது. இந்தத் தரவுச் சேவைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை, மேலும் அவை எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைக்காமல் போகலாம், இதன் விளைவாக மேப்ஸ் மற்றும் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் கிடைக்காமல் போகலாம், தவறாக அல்லது முழுமையற்றவையாக இருக்கலாம். “மேப்ஸ்” செயலியில் உள்ள தகவல்களை உங்கள் சுற்றுப்புறத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். பொது அறிவைப் பயன்படுத்திப் பயணிக்கவும். ஏதேனும் முரண்பாடுகளைத் தீர்க்க தற்போதைய சாலை நிலைமைகளையும் குறியீடுகளையும் எப்போதும் கவனிக்கவும். சில “மேப்ஸ்” அம்சங்களுக்கு இருப்பிடச் சேவைகள் தேவை.
சார்ஜ் செய்தல்: iPhoneஐ சார்ஜ் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
சார்ஜிங் கேபிள் (தயாரிப்புடன் வழங்கப்படுகிறது) மற்றும் Apple USB பவர் அடாப்டரை (தனியாக விற்கப்படுகிறது) பயன்படுத்தி iPhone பேட்டரியை சார்ஜ் செய்யவும்.
MagSafe சார்ஜர் அல்லது MagSafe Duo சார்ஜர் (Apple 20W USB-C பவர் அடாப்டர் அல்லது பிற இணக்கமான பவர் அடாப்டரில் இணைக்கப்பட்டது) அல்லது Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜரில் iPhoneஐ மேல்நோக்கியவாறு வைக்கவும். (MagSafe சார்ஜர், MagSafe Duo சார்ஜர், பவர் அடாப்டர்கள் மற்றும் Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள் தனித்தனியாக விற்கப்படுகின்றன.)
“Made for iPhone” அல்லது நாட்டின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் சர்வதேச மற்றும் வட்டாரப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய, USB 2.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடன் இணக்கமாக உள்ள பிற மூன்றாம் தரப்பு கேபிள்கள் மற்றும் பவர் அடாப்டர்கள் மூலமாகவும் நீங்கள் iPhoneஐ சார்ஜ் செய்யலாம். பிற அடாப்டர்கள் பொருந்தக்கூடிய பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாமல் இருக்கலாம், அத்தகைய அடாப்டர்கள் மூலம் சார்ஜ் செய்தால் மரணம் அல்லது காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த கேபிள்கள் அல்லது சார்ஜர்களைப் பயன்படுத்துவது அல்லது ஈரப்பதமாக இருக்கும்போது சார்ஜ் செய்தால் தீ, மின் அதிர்ச்சி, காயம் அல்லது iPhone அல்லது பிற பொருட்களுக்குச் சேதம் ஏற்படலாம். iPhoneஐ சார்ஜ் செய்ய சார்ஜிங் கேபிள் (தயாரிப்புடன் வழங்கப்படுவது) அல்லது வயர்லெஸ் சார்ஜரை (தனியாக விற்கப்படுவது) பயன்படுத்தும்போது, பவர் அவுட்லெட்டில் அடாப்டரை பிளக் செய்வதற்கு முன்பு அதன் USB கனெக்டர் இணக்கமான பவர் அடாப்டரில் முழுமையாகச் செருகப்பட்டுள்ளதா என உறுதிசெய்யவும். பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும்போது iPhone, சார்ஜிங் கேபிள், பவர் அடாப்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜரை நன்கு காற்றோட்டமான பகுதியில் வைத்திருப்பது முக்கியம். வயர்லெஸ் சார்ஜரைப் பயன்படுத்தும்போது, உலோக கேஸ்களை அகற்றவும், மேலும் சார்ஜர் மீது சாவிகள், நாணயங்கள், பேட்டரிகள், நகைகள் போன்ற உலோகப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை சூடாகலாம் அல்லது சார்ஜ் ஆவதில் இடையூறை ஏற்படுத்தலாம்.
சார்ஜர் கேபிள் மற்றும் கனெக்டர். சார்ஜிங் கேபிள் பவருடன் இணைக்கப்பட்டிருக்கும் போது சார்ஜிங் கேபிள் மற்றும் கனெக்டர் நீண்டநேரம் உங்கள் சருமத்தின் மீது படும்படி இருப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது அசௌகரியத்தையோ காயத்தையோ ஏற்படுத்தலாம். சார்ஜிங் கேபிள் அல்லது கனெக்டர் உங்கள் மீது படும்படி உறங்குவதையோ உட்கார்ந்திருப்பதையோ தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேர வெப்ப வெளிப்பாடு. iPhone மற்றும் Apple USB பவர் அடாப்டர்கள் (தனித்தனியாக விற்கப்படுகின்றன) நாட்டின் பொருந்தக்கூடிய விதிமுறைகளாலும் சர்வதேச மற்றும் வட்டாரப் பாதுகாப்புத் தரநிலைகளாலும் வரையறுக்கப்பட்ட, தேவையான மேற்பரப்பு வெப்பநிலை வரம்புகளுக்கு இணங்குகின்றன. இருப்பினும், இந்த வரம்புகளுக்குள் இருந்தாலும் கூட, நீண்ட காலத்திற்கு வெப்பமான மேற்பரப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அசௌகரியத்தையோ காயத்தையோ ஏற்படுத்தலாம். சாதனம், அதன் பவர் அடாப்டர் அல்லது ஒரு வயர்லெஸ் சார்ஜர் நீண்ட காலத்திற்கு இயங்கும்போது அல்லது பவரில் இணைக்கப்பட்டிருக்கும்போது அவை உங்கள் சருமத்தில் படும்படி இருக்கும் சூழல்களைப் பொது அறிவைப் பயன்படுத்தித் தவிர்த்துக்கொள்ளவும். எடுத்துக்காட்டாக, சாதனம், பவர் அடாப்டர், வயர்லெஸ் சார்ஜர் போன்றவை பவரில் இணைக்கப்பட்டிருக்கும்போது அவை உங்கள் மீது படும் வகையில் உறங்க வேண்டாம் அல்லது போர்வை, தலையணை அல்லது உங்கள் உடலுக்குக் கீழ் அவற்றை வைக்க வேண்டாம். பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும் போது உங்கள் iPhone, பவர் அடாப்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜரை நன்கு காற்றோட்டமான பகுதியில் வைத்திருக்கவும். உடலுக்கு எதிரான வெப்பத்தைக் கண்டறிவதற்கான திறனைப் பாதிக்கும் உடல்நிலை உங்களுக்கு இருந்தால் பிரத்தியேக சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்.
USB பவர் அடாப்டர். Apple USB பவர் அடாப்டரை (தனியாக விற்கப்படுகிறது) பாதுகாப்பாக இயக்குவதற்கும், வெப்பம் தொடர்பான காயம் அல்லது சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கும், பவர் அடாப்டரை நேரடியாக பவர் அவுட்லெட்டில் பிளக் செய்யவும். சிங்க், பாத்டப் அல்லது ஷவர் ஸ்டாலுக்கு அருகில் உள்ள இடங்கள் போன்ற ஈரமான இடங்களில் பவர் அடாப்டரைப் பயன்படுத்த வேண்டாம், மேலும் ஈரமான கைகளால் பவர் அடாப்டரை இணைக்கவோ இணைப்புநீக்கவோ வேண்டாம். பின்வரும் ஏதேனும் நிலைகள் இருந்தால் பவர் அடாப்டரையும் கேபிள்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும்:
பவர் அடாப்டர் பிளக் அல்லது முனைகள் சேதமடைந்திருத்தல்.
சார்ஜ் கேபிள் தேய்ந்திருத்தல் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் சேதமடைந்திருத்தல்.
பவர் அடாப்டரில் அதிகப்படியான ஈரப்பதம் இருத்தல் அல்லது அதில் திரவம் பட்டிருத்தல்.
பவர் அடாப்டர் கீழே விழுந்து அதன் மேற்புறம் சேதமடைந்திருத்தல்.
Apple 20W USB-C பவர் அடாப்டர் விவரக்குறிப்புகள்:
அலைவரிசை: 50 முதல் 60 Hz வரை, சிங்கிள் ஃபேஸ்
லைன் மின்னழுத்தம்: 100 முதல் 240 V வரை
அவுட்புட் பவர்: 5V/3A அல்லது 9V2.2A
அவுட்புட் போர்ட்: USB-C
Apple 18W USB-C பவர் அடாப்டர் விவரக்குறிப்புகள்:
அலைவரிசை: 50 முதல் 60 Hz வரை, சிங்கிள் ஃபேஸ்
லைன் மின்னழுத்தம்: 100 முதல் 240 V வரை
அவுட்புட் பவர்: 5V/3A அல்லது 9V/2A
அவுட்புட் போர்ட்: USB-C
Apple 5W USB பவர் அடாப்டர் விவரக்குறிப்புகள்:
அலைவரிசை: 50 முதல் 60 Hz வரை, சிங்கிள் ஃபேஸ்
லைன் மின்னழுத்தம்: 100 முதல் 240 V வரை
அவுட்புட் பவர்: 5V/1A
அவுட்புட் போர்ட்: USB
செவித்திறன் இழப்பு. அதிக ஒலியைக் கேட்பதால் உங்கள் செவித்திறன் பாதிக்கப்படலாம். பின்னணி இரைச்சல், அதிக அளவிலான ஒலியின் தொடர்ச்சியான வெளிப்பாடு ஆகியவற்றால் ஒலிகள் உண்மையில் இருப்பதைவிட குறைவாக இருப்பதுபோல் தோன்றலாம். உங்கள் காதில் எதையேனும் செருகுவதற்கு முன்பு ஒலியளவைச் சரிபார்த்து ஆடியோ பிளேபேக்கை ஆன் செய்யவும். அதிகபட்ச ஒலியளவு வரம்பை அமைப்பது எப்படி என்பது பற்றிய தகவல்களுக்கு iPhoneஇல் உள்ள “உடல்நலம்” செயலியில் செவிதிறன் அம்சங்களைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும். செவித்திறன் இழப்பு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, ஒலி மற்றும் செவித்திறன் சார்ந்த இணையதளத்தைப் பார்க்கவும்.
கவனத்திற்கு: செவித்திறன் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க, நீண்டநேரம் அதிக ஒலியளவில் கேட்க வேண்டாம்.
ரேடியோ அலைவரிசை வெளிப்பாடு. வயர்லெஸ் நெட்வொர்க்குகளுடன் இணைக்க iPhone ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்துகிறது. ரேடியோ சிக்னல்களால் ஏற்படும் ரேடியோ அலைவரிசை (RF) ஆற்றல் பற்றிய தகவல்களையும், வெளிப்பாட்டைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளையும் தெரிந்துகொள்ள, அமைப்புகள் > பொது அமைப்புகள் > சட்டம் & ஒழுங்குமுறை > RF வெளிப்பாடு என்பதற்குச் செல்லவும் அல்லது RF வெளிப்பாடு தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.
ரேடியோ அலைவரிசை இடையூறு. மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் அல்லது வரம்பிடும் விழிப்பூட்டல்களையும் அறிவிப்புகளையும் கவனிக்கவும். ரேடியோ அலைவரிசை உமிழ்வுகள் சார்ந்த விதிமுறைகளுக்கு இணங்க iPhone வடிவமைக்கப்பட்டு, சோதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டாலும், iPhoneஇல் இருந்து வெளிப்படும் உமிழ்வுகள் மற்ற மின்னணுச் சாதனங்களின் செயல்பாட்டை எதிர்மறையாகப் பாதிக்கலாம், இதனால் அவை செயலிழக்க நேரிடும். விமானத்தில் பயணித்தல், அதிகாரிகளால் வலியுறுத்தப்படுதல் போன்ற சமயங்களில் iPhoneஐப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டால், அதை ஆஃப் செய்யவும் அல்லது ”விமானப் பயன்முறையை” பயன்படுத்தவும் அல்லது அமைப்புகள் > Wi-Fi மற்றும் அமைப்புகள் > Bluetooth என்பதற்குச் சென்று iPhone வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்களை ஆஃப் செய்யவும்.
மருத்துவச் சாதனத்தில் ஏற்படும் இடையூறு. iPhone மற்றும் MagSafe ஆக்சஸரிகளில் காந்தங்களும், மின்காந்தப் புலங்களை வெளியிடும் பாகங்கள் மற்றும்/அல்லது ரேடியோக்கள் உள்ளன. இந்தக் காந்தங்களும் மின்காந்தப் புலங்களும் மருத்துவச் சாதனங்களில் இடையூறு ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் மருத்துவச் சாதனம் குறித்த குறிப்பிட்ட தகவல்களுக்காகவும் உங்கள் மருத்துவச் சாதனத்திற்கும் iPhone மற்றும் MagSafe ஆக்சஸரிகளுக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டுமா என்பது குறித்துத் தெரிந்துகொள்வதற்கும் உங்கள் மருத்துவர் மற்றும் மருத்துவச் சாதன உற்பத்தியாளரைக் கலந்தாலோசிக்கவும். சாத்தியமான இடையூறைத் தடுப்பதற்காக, வயர்லெஸ் அல்லது காந்தம் சார்ந்த தயாரிப்புகளுக்கு அருகே தங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து உற்பத்தியாளர்கள் அடிக்கடி பரிந்துரைகளை வழங்குகிறார்கள். உங்கள் மருத்துவச் சாதனத்தில் iPhone, MagSafe ஆக்சஸரிகள் இடையூறை ஏற்படுத்துகின்றன என்று சந்தேகித்தால் இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடவும்.
பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர்கள், டீஃபிப்ரிலேட்டர்கள் போன்ற மருத்துவச் சாதனங்களில் நெருக்கத்தில் இருக்கும்போது காந்தங்கள் மற்றும் ரேடியோக்களால் தாக்கம் ஏற்படக்கூடிய சென்சார்கள் இருக்கலாம். இந்தச் சாதனங்களுடனான தொடர்புகளைத் தவிர்க்க, MagSafeஐ ஆதரிக்கும் iPhone மாடல்களையும் MagSafe ஆக்சஸரிகளையும் உங்கள் சாதனத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வைக்கவும். அதாவது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் போது 6 அங்குலங்கள்/15 சென்டிமீட்டருக்கு மேல், அல்லது 12 அங்குலங்கள்/30 சென்டிமீட்டருக்கு மேல், ஆனால் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு, உங்கள் மருத்துவர் மற்றும் சாதன உற்பத்தியாளருடன் ஆலோசிக்கவும்.
மருத்துவச் சாதனம் அல்ல. iPhone ஒரு மருத்துவச் சாதனம் அல்ல, மேலும் இதைத் தொழில்முறை மருத்துவ முடிவுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது. நோய் அல்லது பிற மருத்துவ நிலைகளைக் கண்டறிவதற்கு, குணப்படுத்துவதற்கு, குறைப்பதற்கு, சிகிச்சையளிப்பதற்கு அல்லது எந்தவொரு மருத்துவ நிலையையோ நோயையோ தடுப்பதற்கு இது வடிவமைக்கப்படவில்லை அல்லது இதைப் பயன்படுத்தக்கூடாது. உங்கள் உடல்நலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவச் சேவை வழங்குநரிடம் ஆலோசனை பெறவும்.
மருத்துவ நிலைகள். iPhone அல்லது ஒளிரும் லைட்களால் பாதிக்கப்படக்கூடும் என்று நீங்கள் நம்பும் வலிப்புத்தாக்கங்கள், தற்காலிகச் சுயநினவு இழப்பு, கண் சோர்வு, தலைவலி போன்ற ஏதேனும் மருத்துவ நிலை அல்லது அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் iPhoneஐப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.
வெடிக்கக்கூடிய மற்றும் பிற வளிமண்டலச் சூழல்கள். காற்றில் அதிக அளவில் எரியக்கூடிய இரசாயனங்கள், நீராவிகள் அல்லது துகள்கள் (தானியம், தூசி அல்லது உலோகத் தூள்கள் போன்றவை) உள்ள பகுதிகள் போன்ற வெடிக்கும் சாத்தியம் கொண்ட வளிமண்டலச் சூழலில் இருக்கும் எந்தவொரு பகுதியிலும் iPhoneஐ சார்ஜ் செய்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாக இருக்கலாம். ஹீலியம் போன்ற திரவமாக்கப்பட்ட ஆவியாகும் வாயுக்கள் உட்பட தொழில்துறை இரசாயனங்களின் அதிக செறிவுகளைக் கொண்ட சூழல்களில் iPhoneஐப் பயன்படுத்துவது iPhoneஐச் சேதப்படுத்தலாம் அல்லது அதன் செயல்பாட்டைப் பாதிக்கலாம். அனைத்து விழிப்பூட்டல்களுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கவும்.
தொடர் செயல்பாடு. iPhoneஇல் டைப் செய்தல், ஸ்வைப் செய்தல், கேம்களை விளையாடுதல் போன்ற தொடர்ச்சியான செயல்பாடுகளைச் செய்யும்போது, உங்கள் கைகள், கைப்பகுதி, மணிக்கட்டுகள், தோள்கள், கழுத்து அல்லது உடலின் பிற பகுதிகளில் அசௌகரியத்தை நீங்கள் அனுபவிக்கலாம். உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், iPhoneஐப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகள். சாதனத்தின் செயலிழப்பு காரணமாக மரணம், தனிப்பட்ட காயம் அல்லது கடுமையான சுற்றுப்புறச் சேதம் ஆகியவை ஏற்படும் சூழல்களில் இந்தச் சாதனம் பயன்படுத்தப்படக்கூடாது.
மூச்சுத்திணறல் அபாயம். சில iPhone ஆக்சஸரிகள் சிறு பிள்ளைகளுக்கு மூச்சுத்திணறல் அபாயத்தை ஏற்படுத்தலாம். இந்த ஆக்சஸரிகளை சிறு பிள்ளைகளிடம் இருந்து தூரமாக வைக்கவும்.
ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களாக இருந்தால், ஆன்லைன் பாதுகாப்புத் தகவல்கள் தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.